< Back
மாநில செய்திகள்
2-வது நாளாக தொடர்ந்த மழை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

2-வது நாளாக தொடர்ந்த மழை

தினத்தந்தி
|
1 Oct 2023 2:39 AM IST

குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர்ந்த மழையால், 512 குளங்கள் நிரம்பியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர்ந்த மழையால், 512 குளங்கள் நிரம்பியது.

2-வது நாளாக தொடர்ந்த மழை

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு சாரலாக தொடங்கிய மழை, 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மாநகரில் பெய்த தொடர் மழையால் பார்வதிபுரம், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் சாலை, பாலமோர் சாலை, கம்பளம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

கோழிப்போர்விளை

கோழிப்போர்விளை பகுதியில் அதிகபட்சமாக 65.6 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி- 20.2, சிற்றார் 1- 24.2, சிற்றார் 2- 26.4, களியல்- 55.2, கன்னிமார்- 29.4,கொட்டாரம்- 31, குழித்துறை- 4.2, மயிலாடி- 19.4, நாகர்கோவில்- 28.4, பேச்சிப்பாறை- 29.8, பெருஞ்சாணி- 30.4, புத்தன்அணை- 30, சுருளோடு- 34.2, தக்கலை- 41, குளச்சல்- 32.6, இரணியல்- 24, பாலமோர்- 37.8, மாம்பழத்துறையாறு- 26.8, அடையாமடை- 26.2. திற்பரப்பு- 52, மாம்பழத்துறையாறு- 26.8, பாலமோர்- 37.8, ஆரல்வாய்மொழி- 8.2, அடையாமடை- 26.2, குருந்தன்கோடு- 31.4, ஆனைகிடங்கு- 27.4, முள்ளங்கினாவிளை- 48.2, முக்கடல் அணை- 18 என பதிவாகி இருந்தது.

உற்சாக குளியல்

திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பாசன குளங்களில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது.

512 குளங்கள் நிரம்பியது

தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்களில் 512 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 700-க்கும் மேற்பட்ட குளங்கள் 75% நிரம்பியுள்ளது. மற்ற குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேச்சிப்பாறை அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு 596 கன அடி தண்ணீர் வந்து கொண்டிந்த நிலையில், அது நேற்று வினாடிக்கு 1109 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 333 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 231 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று வினாடிக்கு 629 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் 42.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 43.50 அடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

2 வீடுகள் இடிந்து சேதம்

மழையால் விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆறு

மழையால் ஏற்கனவே குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து தடுப்பணை மீது தண்ணீர் வழிந்து செல்கிறது. இதனால் தடுப்பணை மீது போக்குவரத்து தடுக்கப்பட்டு இரும்பு கம்பிகளால் தடுப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீர்மட்டம் அதிகரிக்காமல் ஏற்கனவே பாயந்து வந்த அளவில் தடுப்பணையின் மீது ஆற்று நீர் பாய்ந்து செல்கிறது. தொடர்ந்து தடுப்பணை மீது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்