தொடர் கனமழை: 15 மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம்
|தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக 15 மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சென்னை உட்பட 15 மாவட்ட கலெக்டர்கள், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும், அதனை கலெக்டர்கள் உறுதி செய்யவும், பழைய கட்டடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.