தொடர் கனமழை: வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
|தொடர் கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, கருமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு மற்றும் கருமலை இறைச்சல் பாறை ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இது தவிர நீர்வீழ்ச்சிகள், தடுப்பணைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழை காரணமாக நேற்று வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டரின் உத்தரவின்பேரில் அனைத்து துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினருக்கு மீட்பு பணியில் ஈடுபட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் சா.ப. அம்ரித் அறிவித்திருந்தார்.