விஞ்ஞான யுகத்திலும் ரெயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல - கமல்ஹாசன்
|பொதுமக்களின் உயிரைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரெயில்வே அமைத்துள்ளது. ரெயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்து அந்த வழித்தடத்தில் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் விஞ்ஞான யுகத்திலும் ரெயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கவரப்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
இந்த விஞ்ஞான யுகத்திலும் ரெயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. எதைக்காட்டிலும் முக்கியமானது பொதுமக்களின் உயிர். அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.