< Back
மாநில செய்திகள்
தொடர் கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை - தமிழக அரசு உத்தரவு
மாநில செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
18 Dec 2023 3:03 AM IST

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும், அதிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழை வரையிலும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் மிதமான மழையும், இதுதவிர தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று மட்டும் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று (டிசம்பர் 18ஆம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே தென்மாவட்டங்களில் அதி கனமழை பாதிப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், மீட்பு பணிகளைத் உடனடியாக துரிதப்படுத்தவும், மழைநீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்து துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சு.நாகராஜன், டாக்டர் செல்வராஜ், ஜோதி நிர்மலாசாமி, சுன்சோங்கம் ஜதக் உள்பட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் மாவட்டங்களில் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகள்