சென்னை
மாநகராட்சி அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டு நடவடிக்கை
|டெண்டர் விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், மாநகராட்சி ஒப்பந்ததாரரான மகாதேவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் மற்றும் மின்சாதன வசதிகளை செய்து கொடுப்பதற்காக ரூ.25 லட்சம் பணிக்கான டெண்டர் அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் ஜனவரி 25-ந் தேதி வெளியிட்டது. இந்த ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க பிப்ரவரி 2-ந் தேதி (இன்று) பிற்பகல் 3 மணி வரை காலக்கெடு விதித்தும், பிப்ரவரி 3-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த டெண்டரில் பங்கேற்க நானும் விண்ணப்பித்தேன். ஆனால் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் எனது இணையதள முகவரியை பதிவு செய்து கொடுக்காததால் என்னால் இந்த டெண்டரில் பங்கேற்க முடியவில்லை.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, இந்த டெண்டரை யாருக்கு வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு மட்டுமே இணையதள முகவரி இந்த டெண்டருக்கான விண்ணப்பத்தில் பதிவு செய்து கொடுக்கப்படும் என்றனர். மேலும் டெண்டர் சட்டத்தின்படி ரூ.2 கோடிக்கு குறைவான டெண்டருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து விண்ணப்பிக்க 15 நாட்களும், ரூ.2 கோடிக்கு மேலான டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நாட்களும் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் இந்த டெண்டருக்கு 8 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, இந்த டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிப்பதுடன், அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி, "குறுகிய கால டெண்டர் அறிவிப்பு வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், தொடர்ந்து அதிகாரிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கால அவகாசத்தை வழங்காமல், குறுகிய கால டெண்டர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்" என்று வாதிட்டனர்.
இதையடுத்து. மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், "மனுதாரர் டெண்டரில் பங்கேற்பதற்கு வழிவகை செய்யப்படும்" என்று உறுதி அளித்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஐகோர்ட்டில் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலரான கோவிந்தராஜ் நேரில் ஆஜராகி இருந்தார். வழக்கு தொடர்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதம் செய்யும் கோர்ட்டில் இருந்த அதிகாரி கோவிந்தராஜ், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மனுதாரருக்கு சாதகமாக வாதிடுவதாக கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் இருந்து விலகி கொள்வதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார். அதிகாரி கோவிந்தராஜின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உத்தரவிட்டார். பின்னர், கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு பதில் அளிக்கும்படி அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். டெண்டர் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்றும் தடை விதித்தார்.