மதுரை
உத்தரவை தாமதமாக நிறைவேற்றியதால் அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம்
|உத்தரவை தாமதமாக நிறைவேற்றிது குறித்து தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுக்கோட்டையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், பணி வரன்முறை பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், மனுதாரருக்கு உரிய பலன்களை வழங்க வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்படாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆசிரியர், மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3 வருடங்கள் தாமதமாக நிறைவேற்றப்பட்டதற்கான காரணத்தை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி முத்தழகு ஆகியோர் ஆஜராகினர்.
மேலும், மனுதாரருக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 1975-ம் ஆண்டு முதல் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணை முடிவில், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றியுள்ளதால், இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதேநேரத்தில், பணி வரன்முறை செய்த காலம் தொடர்பாக மாற்றுக்கருத்து இருந்தால் ஐகோர்ட்டில் புதிதாக மனு செய்து உரிய நிவாரணம் பெறலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.