< Back
மாநில செய்திகள்
கன்டெய்னர் லாரிகள் மோதல்; 2 பேர் பலி
அரியலூர்
மாநில செய்திகள்

கன்டெய்னர் லாரிகள் மோதல்; 2 பேர் பலி

தினத்தந்தி
|
20 March 2023 12:01 AM IST

திருமானூர் அருகே கன்டெய்னர் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர்.

விபத்து

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கொண்டிபாலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பித்தானி(வயது 40). சைதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பமன்ஜி ராஜா(39). இவர்கள் 2 பேரும் ஆந்திராவிலிருந்து தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு மீன்களை ஏற்றிக்கொண்டு வருவது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவும் கீழப்பழுவூர் வழியாக தஞ்சை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரியில் மீன்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரே விழுப்புரம் மாவட்டம் காட்டுராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் சுரேஷ்(39) என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் அதிவேகத்தில் பயங்கர சத்தத்துடன் மோதிக்கொண்டன.

2 பேர் பலி

இதில் ரமேஷ்பித்தானியும், பமன்ஜிராஜாவும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்