ஓசூர் அருகே கண்டெய்னர் லாரியில் தீ விபத்து - 20 எலக்ட்ரிக் பைக்குகள் எரிந்து நாசம்
|மின்சார வயர் மீது உரசி கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மதகொண்டப்பள்ளி பகுதியில் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் பைக்குகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் இந்த நிறுவனத்தில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் 40 எலக்ட்ரிக் பைக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. அந்த கண்டெய்னர் லாரி உளிவீரனபள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையின் மேலே சென்றுகொண்டிருந்த மின்சார வயர் மீது உரசி லாரியில் தீப்பிடித்துள்ளது.
இந்த தீ விபத்தில் அந்த லாரியில் இருந்த 20 எலக்ட்ரிக் பைக்குகள் எரிந்து நாசமாகின. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.