சென்னை
கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
|திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் ரூ.50 லட்சம் பொருட்கள் நாசமானது.
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் பகுதியில் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் கன்டெய்னர் லாரியில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கன்டெய்னர் பெட்டியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதை பார்த்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள், லாரி டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு பார்த்தபோது, புகை மேலும் அதிகமாக வந்தது. சிறிது நேரத்தில் கன்டெய்னர் பெட்டி தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கன்டெய்னர் பெட்டியில் எரிந்த தீயை 2 மணிநேரம் போராடி அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கன்டெய்னர் பெட்டியில் இருந்த துணிமணிகள், எலக்ட்ரானிக்கல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.