சென்னை
வாடகையை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு
|வாடகையை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்கு பெட்டகங்கள், கன்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னை புறநகர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில் 2014-ம் ஆண்டு முதல் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை உயர்த்தி தரப்படவில்லை. எனவே வாடகையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி பல முறை கேட்டு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
2014-ம் ஆண்டு டீசல் விலை 48 ரூபாயாக இருந்தது. தற்போது 101 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இன்சூரன்ஸ், எப்.சி., லாரி உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆகையால் உடனடியாக தங்களுக்கு வாடகையை உயர்த்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகளை இயக்காமல் நேற்று முதல் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு சரக்கு பெட்டக முனையங்கள், துறைமுகங்கள் இணைந்து இதில் தீர்வு காண வேண்டும். அதுவரை கன்டெய்னர் லாரிகளை இயக்கமாட்டோம் என்றும் கூறி கன்டெய்னர் லாரிகளை தங்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கன்டெய்னர் லாரிகள் போக்குவரத்து இல்லாததால் காசிமேடு ஜீரோ கேட், எண்ணூர் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.