புதுக்கோட்டை
ரூ.11 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்பு: ஆலங்குடி கோர்ட்டில் வாலிபர் சரண்
|காரைக்குடி அருகே சிகரெட் கம்பெனி வாகனத்தை மறித்து ரூ.11 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் ஒருவர் ஆலங்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
ரூ.11 லட்சம் கொள்ளை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வள்ளியப்பன் என்பவர் சிகரெட் கம்பெனி நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பகுதியில் சிகரெட் ஏற்றி சென்ற வாகனத்தை வழி மறித்த 9 பேர் கொண்ட கும்பல் டிரைவர் மற்றும் கம்பெனி மேற்பார்வையாளர் ஆகியோரை கத்தியால் தாக்கிவிட்டு ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து காரைக்குடி போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
கோர்ட்டில் சரண்
இதையடுத்து, அந்த சிகரெட் கம்பெனியின் முன்னாள் ஊழியரான அன்வர் சலாம், முனீஸ்வரன் கிஷோர் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய காளையார் கோவிலைச்சேர்ந்த குட்லக்கார்த்திக் என்ற வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் அவர் புதுக்கோட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.