மருத்துவ செலவுக்கு பணம் வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
|நாகர்கோவில் அருகே மருத்துவ செலவுக்கு பணம் வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சுதா தேவி. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.8,673 செலுத்தி மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் சுதா தேவி தனக்கு ஏற்பட்ட இருதய நோயின் காரணமாக 2 ஆஸ்பத்திரியில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 232 செலுத்தி சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர் தனது மருத்துவ செலவுக்கான தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான சுதா தேவி குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் நீதிபதி சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு செலவழிக்கப்பட்ட மருத்துவ செலவு தொகை ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 232-ஐ வழங்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு, வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.