< Back
மாநில செய்திகள்
விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டு தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டு தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

தினத்தந்தி
|
30 May 2023 11:54 PM IST

பெரம்பலூர் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை மற்றும் ரூ.60 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவசாயி பலி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரிய பெண்மணியை அடுத்த கொலப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், விவசாயி. இவர் துங்கபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மும்பையை சேர்ந்த யுனிவர்சல் ஷாம்போ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் 2021-22-ம் நிதி ஆண்டில் சுரக்சா காப்பீடு பெற்று இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி உள்ளூரில் நடந்த ஒரு துக்க காரியத்திற்காக சுப்ரமணியன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு தனது உறவினர்களுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மாடு குறுக்கே வந்ததால், சுப்ரமணியன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பின்பு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்ரமணியன் 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

காப்பீட்டு தொகை வழங்க உத்தரவு

இதையடுத்து சுப்ரமணியத்தின் மகன் வீரமணி காப்பீடு தொகையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காப்பீடு செய்து இருந்த நிறுவனம் மற்றும் துங்கபுரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர் ஆகிய இருவர் மீதும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வக்கீல் விஜயன் மூலம் வீரமணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்காகவும் வீரமணியின் மனஉளைச்சலுக்கு காரணமாகவும் இருந்துள்ள முதல் எதிர்மனுதாரர் நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வீரமணிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் காப்பீட்டு தொகையான ரூ.10 லட்சத்தை 45 நாட்களுக்குள் வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்