பெரம்பலூர்
பேக்கரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
|பெரம்பலூரில் பேக்கரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரீமியத்தொகை
பெரம்பலூர் புறநகர் அரணாரையில் வடக்கு தாஜ் நகரில் ஸ்நாக்ஸ், இனிப்பு ஆகிய உணவுபொருட்கள் தயாரிக்கும் ேபக்காி உள்ளது. இதன் உரிமையாளர் ராமஜெயம் (வயது 48). இவர் தனது காருக்கு பெரம்பலூர் பள்ளிவாசல் தெருவில் இயங்கிவரும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். காப்பீட்டை புதுப்பித்து தருவதற்காக பிரீமியத்தொகை ரூ.29 ஆயிரத்து 772-ஐ காசோலையாக செலுத்தியிருந்தார்.காப்பீடு 19.7.2022 முதல் 18.7.2023 வரை அமலில் உள்ளதாக தெரிவித்து காப்பீட்டு பாலிசி ராமஜெயத்திற்கு வழங்கப்பட்டது. இதனிடையே ராமஜெயம் கொடுத்திருந்த காசோலை மிகவும் தாமதமாக வங்கி கலெக்சனுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது.
நோட்டீசு
இந்தநிலையில் வங்கி கணக்கில் போதியளவு பணம் இருந்தும், ராமஜெயம் காப்பீட்டு நிறுவனத்திற்கு கொடுத்திருந்த காசோலையில் குறிப்பிட்ட தொகைக்கு எண்ணால் எழுத்தால் எழுதியிருந்ததற்கு வித்தியாசம் இருப்பதாக கூறி, காசோலை திருப்பி வந்துவிட்டதாக தெரிவித்து காப்பீட்டு கிளை மேலாளர் ராமஜெயத்திற்கு 55 நாட்களுக்கு பிறகு, இதுகுறித்து நோட்டீசு அனுப்பினர். மேலும் அவருக்கு அளித்திருந்த காப்பீட்டு பாலிசியை ரத்து செய்திட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, காப்பீட்டு நிறுவன கிளை மேலாளர் கடிதமும் அனுப்பி உள்ளார்.
ராமஜெயம் தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீசை எடுத்துக்கொண்டு காப்பீட்டு நிறுவன கிளை மேலாளரிடம் முறையிட்டுள்ளார். காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ராமஜெயத்தை அவமரியாதை செய்து, திட்டி, அவரை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த ராமஜெயம், தனது வக்கீல் வீரமுத்து மூலம் காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை பொதுமேலாளர், மதுரை மண்டல மேலாளர் மற்றும் பெரம்பலூர் கிளை மேலாளர் ஆகியோர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 20.10.2022 அன்று மனுசெய்து வழக்கு தொடர்ந்தார்.
ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். இதில் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக, புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டு ஆவணத்தை மனுதாரருக்கு உடனே வழங்க வேண்டும்.
மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை 45 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். உரியகாலத்திற்குள் வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.