< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் வக்கீலுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் வக்கீலுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

தினத்தந்தி
|
12 July 2023 12:15 AM IST

பெரம்பலூர் வக்கீலுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என மொபைல் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அல்லிநகரத்தை அடுத்த தொண்டபாடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது53), வக்கீல். இவர் கடந்த 21.10.2022 அன்று பெரம்பலூரில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் ஸ்மார்ட் டி.வி. வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்நிறுவனத்தின் மேலாளர், ஒரு தனியார் நிறுவனத்தின் தயாரிப்பிலான ஸ்மார்ட் டி.வி. நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். அதன்படி தமிழரசன், ரூ.29 ஆயிரத்து 999 செலுத்தி 43 அங்குலத்தில் டி.வி.யை வாங்கினார். மேலும் அந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலரான காயத்ரி கம்யூனிகேசன் ஷோரூமில் தொடர்புகொண்டு, டி.வி.யை பொருத்தி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஒருவாரம் ஆகியும், அந்த டி.வி.யை பொருத்திதர டெக்னீசியன்களை தனியார் மொபைல் மற்றும் காயத்ரி கம்யூனிகேசன்ஸ் நிறுவனங்கள் தமிழரசன் வீட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை. மேலும் தமிழரசனை அலையவிட்டுள்ளனர். உடனே தமிழரசன் வேறுஒரு கம்பெனி டி.வி.யை வாங்கி அதில் நிகழ்ச்சிகளை தனது குடும்பத்துடன் பார்த்தார். தான் வாங்கிய டி.வி.யை மீண்டும் எடுத்துசென்றுவிடுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்நிறுவனத்தினர் மறுத்துள்ளனர். இதனிடையே மனம் வருந்திய தமிழரசன் தனது வக்கீல் பாண்டியன், மூலம் இருநிறுவனஙகள் மீதும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனுசெய்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். இதில் மொபைல் நிறுவனத்தின் சேவைகுறைபாடு காரணமாகவும், மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு நிவாரணத்தொகையாக ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மொபைல் நிறுவனம் வழங்கவேண்டும் என்றும், தமிழரசன் டி.வி.க்காக செலுத்திய தொகைக்கு 8 சதவீதம் ஆண்டுவட்டி கணக்கிட்டு இந்த தீர்ப்பு வெளிவந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள் மொபைல் நிறுவனம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்