திருவாரூர்
கல்வி கடன் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வங்கிக்கு, திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவு
|கல்வி கடன் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வங்கிக்கு, திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கல்வி கடன் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வங்கிக்கு, திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
முன்னாள் ராணுவ வீரர்
திருவாரூர் மாவட்டம் ஈ.வி.எஸ். நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி(வயது 53). முன்னாள் ராணுவ வீரரான இவர் தனது ஓய்வூதியத்தை திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலமாக பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பாலாஜியின் மகள் ஆஷிகா தனது என்ஜினீயரிங் படிப்பிற்காக அந்த வங்கி கிளையில் கல்வி கடன் பெற்றுள்ளார். 2017-18-ம் ஆண்டு ஆஷிகா படிப்பை முடித்து தற்சமயம் வேலைக்காக காத்திருக்கிறார்.
பணம் பிடித்தம்
இந்த நிலையில் கல்வி கடனை திருப்பி செலுத்த அளிக்கப்படும் ஒரு ஆண்டு கால கெடு முடிவதற்குள் பாலாஜியின் வங்கி கணக்கில் இருந்து அவருடைய மகள் ஆஷிகாவின் கல்வி கடனுக்காக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரூ.23 ஆயிரத்து 4 பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வங்கியில் பாலாஜி கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வாராக்கடனாக அறிவிப்பு
மேலும் 2018-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி ஆஷிகாவின் கல்வி கடனை வாராக்கடன் என வங்கி அறிவித்துள்ளது. வாராக்கடனாக அறிவித்த பின்பு தான் பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறை என்று கூறப்படுகிறது. ஆனால் பாலாஜியின் கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்ட பின்னர்தான், கல்வி கடனை வாராக்கடனாக வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாலாஜி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி நேற்று தீர்ப்பு கூறினார்.
நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
அப்போது பாலாஜிக்கு வங்கி தரப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், அவருடைய வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.23 ஆயிரத்து 4-ஐ 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும், மேலும் வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த பணத்தினை 6 வார காலத்துக்குள் பாலாஜிக்கு அளிக்க வேண்டும் எனவும், தவறினால் 6 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.