< Back
மாநில செய்திகள்
பாலிசி எடுத்து 10 நாட்களில் இறந்த வாடிக்கையாளருக்கு ரூ.52 லட்சம் வழங்க வேண்டும்
நாமக்கல்
மாநில செய்திகள்

பாலிசி எடுத்து 10 நாட்களில் இறந்த வாடிக்கையாளருக்கு ரூ.52 லட்சம் வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
7 Jun 2023 12:15 AM IST

நாமக்கல்லில் பாலிசி எடுத்து 10 நாட்களில் இறந்த வாடிக்கையாளருக்கு ரூ.52 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ரூ.52 லட்சம் வழங்க வேண்டும்

நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசியை கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி எடுத்து உள்ளார். பாலிசி எடுத்து 10 நாளில் அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.

பின்னர் அவரது மனைவி பாலிசி தொகை ரூ.50 லட்சத்தை தமக்கு வழங்குமாறு இன்சூரன்ஸ் கம்பெனியில் விண்ணப்பம் செய்து இருந்தார். ஆனால் பெரியசாமி, பாலிசி எடுத்து ஓராண்டுக்குள் இறந்ததாக கூறி இன்சூரன்ஸ் தொகையை வழங்க அந்த நிறுவனம் மறுத்து விட்டது.

எனவே இது குறித்து அவரது மனைவி சிவகாமி நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில் இயற்கையான மரணத்தை தற்கொலை எனக் கூறி இன்சூரன்ஸ் பணத்தை வழங்க மறுப்பது சேவை குறைபாடு என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் இன்சூரன்ஸ் நிறுவனம், பெரியசாமியின் பாலிசி தொகை ரூ.50 லட்சம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடு ரூ.2 லட்சம் ஆகியவற்றை 4 வார காலத்திற்குள் அவரது மனைவிக்கு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

ரூ.79 கூடுதலாக வசூலித்த வழக்கு

சேலத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் தனியார் நிறுவனம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிபட்டியில் வசிக்கும் ஆனந்த் என்பவரிடம் கார் பழுபார்ப்பதற்காக ரூ.25,149-க்கு ரசீது கொடுத்துவிட்டு. ரூ.79 கூடுதலாக ரூ.25,228 வசூலித்து உள்ளது என தொடரப்பட்ட வழக்கில், வாடிக்கையாளருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்