< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் வகுப்பு நடத்தாத பள்ளி ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
கரூர்
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு நடத்தாத பள்ளி ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
3 Aug 2022 1:43 AM IST

ஆன்லைன் வகுப்பு நடத்தாத பள்ளி ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

ஆன்லைன் வகுப்பு

கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுராஜ். இவரது மகள் ஜமுனா. இவர் கோவையில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் தீபன். இவர்களது மகன் மித்ரன் (5). இவர் தனது தாத்தா பொன்னுராஜ் பாதுகாப்பில் இருந்தார். மித்ரனை கரூரில் உள்ள அட்ரியன் பள்ளியில் ப்ரீகேஜி வகுப்பில் பொன்னுராஜ் சேர்த்தார்.

இதற்காக ரூ.38 ஆயிரத்தை மித்ரனின் தாய் ஜமுனா ஆன்லைன் மூலம் கடந்த 27.5.2020-ந்தேதி செலுத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் வகுப்பு தொடங்கும் என கூறிய நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடங்கவில்லை.

ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு

இதுகுறித்து பொன்னுராஜ் அந்த பள்ளியை அணுகி விசாரித்தபோது முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து கட்டணத்தை திரும்ப வழங்கக்கோரி பொன்னுராஜ் கேட்டதையடுத்து அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்வி கட்டணம் ரூ.38 ஆயிரம் திரும்ப செலுத்தக்கோரியும், ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் சேவைக்குறைபாடு ஏற்படுத்தியதற்காகவும், கடுமையாக நடந்து மன உளைச்சல் ஏற்படுத்திய காரணத்திற்காக ரூ.2 லட்சம் வழங்கக்கோரியும் பொன்னுராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர் ஏ.எஸ்.ரத்தினசாமி ஆகியோர் நேற்று அளித்த உத்தரவில் கல்விக்கட்டணம் ரூ.38 ஆயிரத்தை 27.5.2020-ந் தேதியிலிருந்து 6 சதவீத வட்டியுடனும், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைப்பாட்டிற்காகவும் ரூ.1 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழக்கு தாக்கல் செய்த 22.9.2021-ந் தேதியிலிருந்து தொகை வசூலாகும் தேதி வரை கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்