< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை

தினத்தந்தி
|
29 Sept 2022 3:45 PM IST

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு 20 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். 3 மாதத்திற்கு ஒரு முறை காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

மேலும் படித்து வேலையற்ற உள்ளூர் இளைஞர்களுக்கு இந்த முகாம்கள் மூலம் தங்கள் வேலைவாய்ப்பை உறுதிபடுத்தி கொள்ள முடியும். இந்த நிகழ்விற்கு தொழில் நிறுவனங்களும் சம்மதம் தெரிவித்துள்ளன.

மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற 1,500 இளைஞர்கள் வேலை வாய்ப்பு வேண்டி மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து ஒரு மாத காலத்திற்குள் அவரவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலையினை நமது மாவட்டத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி தகுதியான வேலையை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் கு.செல்வப்பெருந்தகை, சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, எம்.வரலட்சுமி, எஸ்.எஸ்.பாலாஜி. காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்