"அறுவை சிகிச்சை நிபுணர்களை தணிக்கை செய்யும் அமைப்பு குறித்து ஆலோசனை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
|கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இழப்பு என்பது யாராலும் ஈடுசெய்ய முடியாதது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை நிபுணர்களை தணிக்கைக்கு உட்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது அவர் கூறியதாவது;-
"கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இழப்பு என்பது யாராலும் ஈடுசெய்ய முடியாதது. ஒரு உயிரின் மதிப்பு கோடிகளால் ஈடுசெய்யக் கூடியது அல்ல.
தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள 36 மருத்துவ கல்லூரிகளின் துறைத் தலைவர்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து அவர்களை தணிக்கை செய்யும் அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மேலும் அறுவை சிகிச்சைகள் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அதில் எந்த அளவு கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கும் ஆலோசனைக் கூட்டத்தை இன்னும் ஒரு வார காலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.