நீலகிரி
டேன்டீ தொழிற்சங்க கூட்டமைப்புடன் கலந்தாய்வு கூட்டம்:530 தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை-அமைச்சர் மதிவேந்தன் தகவல்
|டேன்டீ தொழிற்சங்க கூட்டமைப்புடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் 530 தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
பந்தலூர்
டேன்டீ தொழிற்சங்க கூட்டமைப்புடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் 530 தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
டேன்டீ தொழிற்சங்க கூட்டம்
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் டேன்டீ தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அறிவித்த டேன்டி தொழிலாளர்கள் ஊதியம் 30-9-2021-ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விலைவாசி உயர்வு, கல்வி கட்டண உயர்வு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பணம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிர்வாகம் 1-10-2020-ம் ஆண்டு முதல் டேன்டி தொழிலாளர்கள் தற்போது வாங்கி வரும் 363 ரூபாய் 90 பைசா ஊதியத்தை அடிப்படையாக வைத்து ஒரு நாளைக்கு 100 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கவேண்டும். டேன்டி தேயிலை தோட்டங்களில் தற்போது பசுந்தேயிலை அதிகமாக வளரந்்துள்ளது. ஆனால் பசுந்தேயிலையை பறிப்பதற்கு தேவையான தொழிலாளர்கள் இல்லாததால் தேயிலையின் தரம் குறைந்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு பணி நீக்கம் செய்த 530 தற்காலிக தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் 14 நாட்களுக்குள் மேற்கண்டு தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்.
போராட்டம் நடத்த முடிவு
தவறும்பட்சம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்துவது, உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும், இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர், டேன்டி நிர்வாக இயக்குநர், மாவட்ட கலெக்டர், காவல்துறையினருக்கும் மனுக்கள் அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று பந்தலூர் நெல்லியாளம் நகரமன்ற அலுவலகத்தில் டேன்டீ தொழிலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு
கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.425 சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் சில தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் குறிப்பிட்ட சம்பளம் வழங்கமுடியவில்லை. ஆனால் இதுதொடர்பான அனைத்து பிரச்சினைகளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரிடையாக தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். 530 தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித், முதன்மை தலைமை உயிரின பாதுகாவலர் சுப்ரத்மஹோபத்ரா, கூடலூர் மாவட்ட வனஅலுவலர் ஓம்கார், அரசு தேயிலை தோட்ட பொதுமேலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேயிலை தோட்டமேலாளர்கள் புஸ்பராணி, சிவகுமார், ஸ்ரீதர், தொழிற்சங்க தலைவர்கள் சுப்பிரமணியம், மாடசாமி, யோகநாதன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.