திருவள்ளூர்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை கலந்தாய்வு கூட்டம்
|திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கூட்டம் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தலைமையில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறைகள் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி பேரூராட்சி, பொதுப்பணித்துறை, வேளாண் உழவர் நலத்துறை, பொது விநியோகத் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் மத்திய மந்திரி கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
மானிய தொகை
அதை தொடர்ந்து பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் கீழ் 5 பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஏதுவாக அரசு மானிய தொகை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுவதற்கான ஆணையையும், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.