சென்னை
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.134 கோடியில் 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள்
|சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.134 கோடியில் 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
770 புதிய குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை மற்றும் சுபேதார் கார்டன் ஆகிய திட்டப் பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.134.26 கோடி மதிப்பிலான 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
18 மாத காலத்தில்...
டாக்டர் தாமஸ் சாலை திட்ட பகுதியில் 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 300 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.77.74 கோடி மதிப்பில் 470 புதிய குடியிருப்புகள் கட்டவும், சுபேதார் கார்டன் திட்டப் பகுதியில் 45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 256 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.56.52 கோடி மதிப்பில் 300 புதிய குடியிருப்புகள் கட்டவும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 18 மாத காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்கப்பட்டு, இதில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒப்படைக்கப்படும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களை ஆய்வு செய்ததில், சென்னையில் 27,038 குடியிருப்புகளும், மாநிலத்தின் இதர நகரங்களில் 3,354 குடியிருப்புகளும் என மொத்தம் 30,392 குடியிருப்புகள், காலநிலை மாற்றம் நீண்ட நாள் பயன்பாட்டால் சிதிலமடைந்து உள்ளது கண்டறியப்பட்டது. இந்த குடியிருப்புகளை அகற்றி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ரூ.2,400 கோடி மதிப்பில் 15 ஆயிரம் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
40 திட்டப் பகுதிகளில்...
இதனை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னையில் 10 திட்டப் பகுதிகளில் உள்ள 3,934 பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டும், 11 திட்டப்பகுதியில் 2,258 குடியிருப்புகள் இடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 19 திட்டப் பகுதிகளில் 6,805 குடியிருப்புகள் இடிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஆக மொத்தம் 40 திட்டப்பகுதிகளில் 12,997 குடியிருப்புகள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வரும் 20 திட்டப் பகுதிகளில் 7,175 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும். புதிய தொழில்நுட்பங்களை கொண்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மிக குறுகிய காலத்தில் கட்டிடங்கள் நல்ல தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.