செங்கல்பட்டு
மிஸ் இந்தியா போட்டியில் 2-வது இடம் பிடித்த கட்டிட தொழிலாளியின் மகள்
|மிஸ் இந்தியா போட்டியில் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் 2-வது இடம் பிடித்து சாதனை புரிந்தார்.
மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நால்வர் கோவில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 53). கட்டிட தொழிலாளி. அவரது மனைவி மலர்விழி (47). தனியார் நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்துவருகிறார்.
இவர்களது மகள் ரக்சயா (20). தனியார் கல்லூரியில் படிப்பை முடித்துள்ள இவர் தன்னுடைய சிறு வயது முதல், தான் அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தார். தனது குடும்பம் வறுமையில் இருந்தபோதும் தனது சொந்த முயற்சியில் பகுதிநேர வேலை செய்து கொண்டு செல்போன் செயலி மூலம் மிஸ் தமிழ்நாடு மற்றும் மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நடை, உடை, பாவனை, பேச்சுத்திறன் என அனைத்திலும் தன்னை தயார்ப்படுத்தி கொண்டார் ரக்சயா.
மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ரக்சயாவை அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கவுரவிக்கப்பட்டார். தொடர் முயற்சியாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வானார் ரக்சயா. அதனை தொடர்ந்து மாநில அளவிலான போட்டி கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த நிலையில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் தமிழக பிரிவில் ரக்சயா முதன் முறையாக மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதி போட்டிக்கு அப்போது தேர்வானார்கள். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மிஸ் இந்தியா போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்கு வாங்காளம், ஜார்கண்ட், பீகார், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இறுதி போட்டிக்கு தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களில் இறுதிப்போட்டிக்கு 17 பேர் தேர்வானார்கள்.
மிஸ் இந்தியா போட்டியில் 2-வது இடம்
இதில் மராட்டிய மாநிலம், சதாரா நகரத்தை சேர்ந்த சுஷ்மிதாடுமால் (19) மிஸ் இந்தியா போட்டியில் முதலிடத்தையும், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் ரக்சயா 2-வது இடத்தையும், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சிம்ரல்கால் (20) 3-வது இடத்தையும் பிடித்தனர். மிஸ் இந்தியா போட்டியில் 2-வது இடத்தை பெற்ற ரக்சயாவுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.