சென்னை
கட்டிடத்தொழிலாளி அடித்துக்கொலை; போதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைது
|சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் கட்டையால் அடித்து கட்டிடத்தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். போதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைதானார்.
போதையில் மோதல்
சென்னை நெசப்பாக்கம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 46). கட்டிட வேலை செய்பவர். அதே பகுதியில் கூலி வேலை செய்தவர் மூர்த்தி (30). இவரது சொந்த ஊர், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள கீழப்பெரும் பள்ளம் ஆகும். எம்.ஜி.ஆர்.நகரில் தங்கி இருந்து இவர் வேலை பார்த்து வந்தார்.
கந்தனும், மூர்த்தியும் நண்பர்கள். தினமும் இரவு வேலை முடிந்து வந்து, ஒன்றாக மது அருந்துவார்கள். கடந்த 13-ந் தேதி அன்று இவர்கள் வழக்கம்போல மது அருந்தினார்கள். போதை அதிகமாகவே, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையில் முடிந்தது.
அடித்துக்கொலை
சண்டையின் உச்சகட்டத்தில் மூர்த்தி, கந்தனை கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. அடி பலமாக பட்டதில், கந்தன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். மூர்த்தி தப்பி ஓடி விட்டார். காயம் அடைந்த கந்தன், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மூர்த்தியும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கந்தன் பரிதாபமாக இறந்து போனார். இதனால் எம்.ஜி.ஆர்.நகர் போலீசார், மூர்த்தி மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினார்கள்.
நண்பர்களாக இருந்தவர்களின் குடும்பம், மது பழக்கத்தால் இன்று தள்ளாடும், நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கந்தன் உயிரை இழந்தார். மூர்த்தி கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு போய் விட்டார்.