< Back
மாநில செய்திகள்
சாலையில் கொட்டிக்கிடக்கும் கட்டிட கழிவுகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சாலையில் கொட்டிக்கிடக்கும் கட்டிட கழிவுகள்

தினத்தந்தி
|
8 Sept 2023 1:47 AM IST

கும்பகோணத்தில் சாலையில் கொட்டிக்கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் சாலையில் கொட்டிக்கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டிட கழிவுகள்

கும்பகோணம் மாநகராட்சியில் புதிய பஸ்நிலையம் அருகே டாக்டர் ஜாகிர் உசேன் தெரு உள்ளது. இந்த பகுதியின் அருகே ஏராளமான நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன. இந்த தெருவை அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு- தனியார் ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த தெருவில் சாலையின் குறுக்கே சிமெண்டு கற்கள், மணல் உள்ளிட்ட கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது.

இந்த கழிவுகளை இரவு நேரங்களில் மர்மநபர்கள் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இவை சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் காயம்

மேலும் ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்துவிடுகின்றனர். மேலும் புதிய பஸ் நிலையம் பகுதியில் மதுக்கடைகள் உள்ளதால் மதுப்பிரியர்கள் மதுப்பாட்டில்களை வாங்கி விட்டு இந்த சாலையோரத்தில் நின்று கொண்டு மது குடிக்கின்றனர்.

இதனால் இந்த சாலை முழுவதும் திறந்த வெளி பாராக காணப்படுகிறது. இவ்வாறு வரிசையாக அமர்ந்து கொண்டு மது குடிப்பதால் பயணிகளும் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். சில நேரங்களில் மதுபிரியர்கள் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதுடன், ஆபாச வார்த்தைகளால் பேசி வருகின்றனா்.

மதுபிரியர்கள் அட்டகாசம்

சிலர் பாட்டில்களை சாலையிலேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.நாளுக்குள் நாள் இங்கு மதுபிரியர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டு தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தொடர்ந்து மதுபிரியர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், டாக்டர் ஜாகிர் உசேன் தெருவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே கிடக்கும் கட்டிட கழிவுகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.

அகற்ற வேண்டும்

மேலும் தெருவிற்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. இந்த நிலை தான் நீண்ட நாட்களாக தொடர்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதியில் சாலையின் குறுக்கே கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்