சென்னை
ஆதம்பாக்கத்தில் ரூ.122 கோடியில் பாதாள சாக்கடை இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி
|ஆதம்பாக்கத்தில் ரூ.122 கோடியில் பாதாள சாக்கடை இரும்பு குழாய்கள் அமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர்.
இரும்பு குழாய்கள்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர் மற்றும் பி.வி. நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் பழுதடைந்து அடிக்கடி சாலைகளில் பள்ளம் ஏற்படுவதால் கான்கிரீட் குழாய்களை மாற்றி புதிதாக இரும்பு குழாய்களை ரூ.122 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் மாற்றி அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதில் முதல் கட்டமாக ரூ.70 கோடியே 22 லட்சம் மதிப்பிலான திட்டப்பணி தொடக்க விழா ஆதம்பாக்கத்தில் நடந்தது. சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் கிர்லோஷ் குமார் தலைமை வகித்தார். சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார். ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், வார்டு கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
புதிய திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
சென்னையில் 80 லட்சம் வரை மக்கள் தொகை உள்ளது. லண்டன் மாநகராட்சிக்கு அடுத்து பழமையான மாநகராட்சி சென்னைதான். 1,000 எம்.எல்.டி. தண்ணீரை சென்னை மாநகராட்சிக்கு கொடுக்கிறோம். 2,000 எம்.எல்.டி தண்ணீராக கொடுக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். வெளிநாட்டு உதவியோடு 1,000 ஏரிகளை செப்பனிடும் பணியை தொடங்கி இருக்கிறோம்.
மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டம் என அனைத்து பணிகளையும் செய்து முடிக்கப்பட்டதும் சாலைகளை உடனடியாக போட்டு விட்டு மற்ற பணிகள் செய்யப்படும். மழை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் திட்டப் பணிகள் தாமதமாகிறது. விரைவில் பணிகளை முடிக்க துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்துகிறோம்.
சென்னை மாநகரில் 1,000 கழிவறைகள் உருவாக்குகிற திட்டத்தில் தற்போது 370 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் கல்யாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.