< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து பணிமனை கட்டும் பணி மந்தம்
நீலகிரி
மாநில செய்திகள்

போக்குவரத்து பணிமனை கட்டும் பணி மந்தம்

தினத்தந்தி
|
5 Sept 2023 2:45 AM IST

கோத்தகிரியில் ரூ.2½ கோடியில் போக்குவரத்து கழக பணிமனை கட்டும் பணி மந்தமாக நடந்து வருகிறது. விரைந்து முடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோத்தகிரி

கோத்தகிரியில் ரூ.2½ கோடியில் போக்குவரத்து கழக பணிமனை கட்டும் பணி மந்தமாக நடந்து வருகிறது. விரைந்து முடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இடவசதி இல்லை

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கோத்தகிரியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 63 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பணிமனையில் பஸ்களை நிறுத்தி வைக்க, போதுமான இடவசதி இல்லாததால், காமராஜர் சதுக்கம் பகுதி சாலையோரம், பஸ் நிலையம் மற்றும் சாலைகளில் நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் இரவில் பணிமுடிந்து திரும்பும் மற்றும் அதிகாலை பஸ்களை இயக்கும் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி இல்லை. தொடர்ந்து கோத்தகிரி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமாக பணிமனை கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 1993-ம் ஆண்டு கோத்தகிாி-குன்னூர் சாலையில் ஓரசோலை அருகே 1.53 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிமனை கட்டும் பணி நடைபெறவில்லை.

பணிமனை

இந்தநிலையில் கடந்த ஆண்டு புதிய பணிமனை கட்டுவதற்காக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பஸ்கள் பராமரிப்பு பணிமனை, தொழிலாளர்களுக்கு தங்கும் ஓய்வறை, உணவகம், கழிப்பிடம், டீசல் பங்க், பஸ்களை கழுவும் மேடை, காவலாளி அறை மற்றும் அலுவலகம் கட்டப்பட உள்ளது. இங்கு 25 பஸ்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதையடுத்து அங்கு 100 மீட்டர் நீளத்திற்கு சாலையோர தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வந்தது.

ஆனால், 1½ ஆண்டாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தாலும், இன்னும் நிறைவு பெறாமல் உள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கூறும்போது, புதிய பணிமனை கட்டும் பணி தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிமனை கட்டும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்