< Back
மாநில செய்திகள்
சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
26 July 2023 2:45 AM IST

கிணத்துக்கடவில் நான்கு வழிச்சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து 50 மீட்டர் தூரத்திற்கு கிடப்பில் போடப்பட்ட சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் நான்கு வழிச்சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து 50 மீட்டர் தூரத்திற்கு கிடப்பில் போடப்பட்ட சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

பொதுமக்கள் அவதி

கோவை-பொள்ளாச்சி இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், ஆட்சிப்பட்டி, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய 4 இடங்களில் நான்கு வழிச்சாலையை ஒட்டி சர்வீஸ் சாலை செல்கிறது. சர்வீஸ் சாலை செல்லும் வழியில் குடிநீர் குழாய்களும் நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டு உள்ளன. சில இடங்களில் நிலம் கையகப்படுத்த படாமல் இருந்ததால் சர்வீஸ் சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

அந்த வகையில் கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே சாலைப்புதூர் பகுதியில் சர்வீஸ் சாலையின் ஒரு பகுதியில் 50 மீட்டர் தூரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையாமல் இருந்தது. இதனால் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். நீண்ட நாட்களாக சாலை அமைக்கும் பணி தொடங்காததால், பொதுமக்கள் கடும் சிரமத்துடன் சர்வீஸ் சாலையில் சென்று வந்தனர்.

சாலை பணி

தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையினர் அங்கு நிலம் கையகப்படுத்தும் பணியை நிறைவு செய்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து சாலைப்புதூரில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்த சாலை அமைய உள்ள பகுதியில் இருந்த வீட்டு உரிமையாளர்களே தங்களது வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். இந்தநிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை சமன்படுத்தும் பணி நடந்தது.

தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையினர் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சாலைப்புதூர் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்படுவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமம் இன்றி இந்த சாலையில் பயணம் செய்யலாம். கிணத்துக்கடவில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு செல்ல கோதவாடி பிரிவில் சென்று தான் நான்கு வழிச்சாலையில் இணையும் என்றனர்.

மேலும் செய்திகள்