< Back
மாநில செய்திகள்
பள்ளி வகுப்பறை, அங்கன்வாடி கட்டுமான பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

பள்ளி வகுப்பறை, அங்கன்வாடி கட்டுமான பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

தினத்தந்தி
|
10 Feb 2023 10:29 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் பள்ளி வகுப்பறை, அங்கன்வாடி கட்டிட பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நூலக புனரமைப்பு பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையக்கட்டிடம், சிமெண்ட்டு சாலை அமைக்கும் பணிகள், தடுப்பணைகள், கழிவுநீர் கால்வாய்கள், சிறு பாலங்கள், பள்ளி சுற்றுச்சுவர், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள், பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், நமக்கு நாமே திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மார்ச் மாதத்திற்குள்

மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் சிறுசிறு பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி ஆகிய கட்டுமான பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்ற மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் எங்கும் குப்பைகள் தேங்காதவாறு கண்காணிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் இயங்கும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மஞ்சப்பைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் 11 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு வாக்கி டாக்கிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, உதவி திட்ட அலுவலர் செல்வன், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ்குமார், பழனிசாமி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்