செங்கல்பட்டு
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
|கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மழைநீர் வடிகால்வாய் பணி
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புறநகர் பஸ் நிலையம் பகுதியில் மழை பெய்யும் போது மழைநீர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த சமயத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் ரூ.17 கோடி மதிப்பில் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக ராட்சத பொக்லைன் ஏந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
போக்குவரத்து நெரிசல்
இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனங்கள் செல்வதற்கு போலீசார் வழிவகை செய்தனர். இதனால் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை- திருச்சி மற்றும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'இரவு நேரத்தில் வடிகால் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.