< Back
மாநில செய்திகள்
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தினத்தந்தி
|
5 July 2022 12:24 PM IST

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

'சிங்கார சென்னை 2.0.' திட்டத்தின் கீழ் ரூ.184.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40.79 கி.மீ. நீளத்துக்கும், ரூ.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2-ம் கட்டமாக 20 கி.மீ. நீளத்துக்கும், கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ஆசிய வங்கியின் வளர்ச்சி நிதி உதவியுடன் ரூ.3 ஆயிரத்து 220 கோடியில் 769 கி.மீ. நீளத்துக்கும், கோவளம் வடிநில பகுதிகளில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.150.47 கோடியில் 39 கி.மீ. நீளத்துக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் விடுபட்ட 144 இடங்களில் 45 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.119.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின்கீழ் ரூ.26.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 9.80 கி.மீ. நீளத்துக்கும், புளியந்தோப்பு பகுதியில் ரூ.7.41 கோடி மூலதன நிதியில் 2 கி.மீ. நீளத்துக்கும், தமிழக அரசின் வெள்ளத்தடுப்பு சிறப்பு நிதியின் கீழ் ரூ.291.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 107.56 கி.மீ. நீளத்துக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

மழைநீர் வடிகால்களில் உள்ள வண்டல்கள் தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால்களை ஆண்டு முழுவதும் பராமரிக்கும் வகையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் திரு.வி.க.நகர், தண்டையார்ப்பேட்டை மண்டலங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கொசஸ்தலையாற்று வடிநில பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் குறிப்பாக மணலி, மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.39.12 கோடி மதிப்பில் 110 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், சிறு பழுதுகளை சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.39.26 கோடி மூலதன நிதியின் கீழ் ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் சுமார் 1,055 கி.மீ. நீளத்துக்கு தூர்வாருதல் மற்றும் சிறுபழுதுகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 24 சிப்பங்களாக ஒப்பம் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்