சென்னை
பூந்தமல்லியில் இந்த ஆண்டு இறுதிக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு - மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் தகவல்
|பூந்தமல்லி பகுதியில் இந்த ஆண்டு இறுதிக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையும். விரைவில் கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில்
சென்னையில் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 3-வது வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்தபாதையில் மாதவரம்-சிப்காட் வரை 47 கிலோ மீட்டர் நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்க ரெயில் நிலையங்கள் உள்பட 50 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வர உள்ளன.
சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வரும் 2026-ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மெட்ரோ ரெயில் சேவைக்காக சாலையில் நீல நிற தடுப்புகளால் அடைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் பணிகள் நடக்கும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக போரூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தூண்கள் கட்டி முடிக்கப்பட்டு, சாலையின் மையத்தில் உள்ள கான்கிரீட் தூண்களுக்கு அருகில் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு அதிக சாலை வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மெரினா கடற்கரையில் சுரங்கம்
தற்போது போரூர்- பூந்தமல்லி இடையே 10 கிலோ மீட்டர் தூரத்தில் நீல நிற தடுப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் குறைக்கப்பட்டு, ஒரு சில இடங்களில் உயர்மட்ட ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் உயர்த்தப்பட்ட பாதையில் தொடர்ச்சியான சோதனைகளை முடித்த பிறகு உயர்த்தப்பட்ட ரெயில் நிலையத்தின் கட்டுமானம் தொடங்கும். அவ்வாறு ரெயில் நிலையங்கள் கட்டும் போது, சாலைகளில் அதிக இடங்களை தடுப்பு சுவர்கள் கொண்டு அடைக்க வேண்டிய தேவை ஏற்படாது. 2-ம் கட்டமாக 42.6 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் முடிவடைய அதிக நேரம் எடுக்கும்.
தற்போது மாதவரத்தில் மட்டும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் செயல்படத்தொடங்கும். பூந்தமல்லி புறவழிச்சாலையில் பராமரிப்பு பணிமனையுடன் போரூர் மற்றும் பூந்தமல்லி இடையே 10 கிலோ மீட்டர் தூரத்தை வருகிற 2025-ம் ஆண்டின் மத்தியில் திறக்க திட்டமிட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறியதாவது:-
தூண்கள் அமைக்கும் பணி
மெட்ரோ ரெயில் சேவைக்காக கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையில் நடந்து வரும் பணிகள் வருகிற 2026-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றாலும், உயர்மட்ட பாதைக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
அதற்கு பிறகு தற்போது சாலையில் தடை செய்துள்ள அதிக இடம் தேவையில்லை. இதனால் பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலைகளில் போடப்பட்டுள்ள தடுப்புகள் அப்புறப்படுத்தப்படும். இதனால் போக்குவரத்துக்கான இடம் அதிகரிக்கப்படுவதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கும் விரைவில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.