< Back
மாநில செய்திகள்
வேலூர் விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி தீவிரம்
வேலூர்
மாநில செய்திகள்

வேலூர் விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி தீவிரம்

தினத்தந்தி
|
26 Jun 2023 11:57 PM IST

வேலூர் விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர் விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமான நிலையம்

வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. பல ஆண்டுகள் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஓடுதளம், டெர்மினல் கட்டிடம், தளவாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.

இதன் நடுவே இருந்த தார்வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சியில் திடீரென தொய்வு ஏற்பட்டது.

சுமார் 10 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதால் அதை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக பல மாதங்கள் விமான நிலைய பணிகள் முடங்கிகிடந்தன.

இதனால் அங்குள்ள ஓடுதள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செடி, கொடிகள் முளைத்தன. டெர்மினல் கட்டிடமும் பராமரிப்பின்றி காணப்பட்டது.

கண்காணிப்பு கேமராக்கள்

இந்த நிலையில் அந்த 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை கைவிட்டு வேலூர் விமான நிலைய பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்காரணமாக மீண்டும் விமான நிலைய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இடையூறாக இருந்த மின்கம்பங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுதவிர விமான நிலையத்தின் உள்புற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே விமான நிலையத்தின் டெர்மினல் கட்டிடத்தின் பின்புறம் உள்ள சாலையையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமான நிலையத்தில் உள்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

வெளிப்புறத்தில் ஏரியையொட்டி உள்ள சாலைப்பகுதியிலும் சுற்றுச்சுவர் கட்டப்படுவது அவசியமாகும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்