புதுக்கோட்டை
முத்துமாரியம்மன் கோவிலில் புதிய தேர், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள்
|முத்துமாரியம்மன் கோவிலில் புதிய தேர், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடந்து வந்தது. இந்தநிலையில் இன்று கோவிலுக்கு புதிய வைரத்தேர் ரூ.40 லட்சம் மதிப்பிலும், சுற்றுச்சுவர் ரூ.20 லட்சம் மதிப்பிலும் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூைஜ தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பூமி பூைஜயை தொடங்கி வைத்தார். மேலும் புதிய தேர் செய்வதற்கான பணி தொடங்க உள்ள நிலையில், ஊர் சார்பில் வசூல் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் தொகையை, அமைச்சர் மெய்யநாதன் தேர் செய்வதற்கான முன் தொகையாக வழங்கினார். தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாத்தான்குளத்தில் 5 ஏக்கர் பரப்ப ளவில் ஏற்கனவே நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை அமைச்சர் பார்வையிட்டார். மேலும் மீதமுள்ள 10 ஏக்கரில் பழங்கள் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் மா, கொய்யா, பலா, நாவல் உள்ளிட்ட 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். பின்னர் பாத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 100 நாள் பயனாளிகளுடன் கலந்து கொண்டு மா, பலா, வேம்பு, தேக்கு உள்ளிட்ட 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் அரையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி துரை, பாத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜசோழன், திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை கே. பி.கே.டி. தங்கமணி, அரையப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மற்றும் கிராம பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.