செங்கல்பட்டு
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.3½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி
|நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.3½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தில் போதிய இட வசதிகள் இல்லாத காரணத்தினால் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து நந்திவரம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள 63 சென்ட் நிலத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் எம்.பி.செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ.வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, நகர மன்ற துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
இதேபோல நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் சசிகலா, நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், நகர மன்ற கவுன்சிலர் ஜெயந்தி ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.