கடலூர்
கம்மாபுரம் ஒன்றியத்தில் வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் உத்தரவு
|கம்மாபுரம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
கம்மாபுரம்,
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கம்மாபுரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பி்ரமணியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-,
கம்மாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 600 வீடுகள் கட்ட உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக கட்டுமான பணிகள் நடைபெற வில்லை. சில ஊராட்சிகளில் இப்பணிகள் தொடங்கப்படாமலும், சில ஊராட்சிகளில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் முழுமையடையாமலும் உள்ளது. ஆகவே ஒன்றிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வளர்ச்சித்திட்ட பணிகள்
மேலும் அங்கன்வாடி மைய கட்டிடங்கள், கழிப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் போன்ற அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகளையும் தரமாகவும், குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி திட்டம்) பவன் குமார் ஜி கிரிப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வபாலன், ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் வளர்மதி ராஜசேகர், செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.