கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் அரசு பஸ்சில் கட்டு, கட்டாக ரூ.2 லட்சம் சிக்கியது
|கன்னியாகுமரியில் அரசு பஸ்சில் கட்டு, கட்டாக ரூ.2 லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பெங்களூரூவில் இருந்து புறப்பட்ட ஒரு அரசு பஸ் நேற்று காலையில் கன்னியாகுமரியை வந்தடைந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதும், அதை பணிமனைக்கு கொண்டு செல்ல டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆயத்தம் ஆனார்கள்.
அதற்கு முன்னதாக பஸ்சுக்குள் யாராவது இருக்கிறார்களா? ஏதேனும் பொருட்களை விட்டுச் சென்றுள்ளார்களா? என சோதனை செய்தனர். அப்போது பஸ்சின் கடைசி இருக்கைக்கு அருகே உபகரணங்கள் வைக்கும் பெட்டியை திறந்து பார்த்தனர்.
அங்கு கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.2 லட்சம் இருந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பணத்தை பார்வையிட்டனர். அதனை வைத்து சென்றது யார்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்தார்களா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் அங்கு ஒரு வாலிபர் விரைந்து வந்தார். அவர் பணத்தை பாதுகாப்புக்காக பெட்டியில் மறைத்து வைத்து கொண்டு வந்ததாகவும் அதை தவறுதலாக விட்டு சென்றதாக தெரிவித்தார்.
ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரையும், பஸ்சில் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தையும் கன்னியாகுமரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் என்றும், சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பணத்தை தனது சொந்த தேவைக்காக ெகாண்டு வந்ததாக கூறினார். இதையடுத்து அவர் கூறிய அடையாளங்களை சரிபார்த்துவிட்டு பணத்தை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.