கடலூர்
ரூ.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி
|விருத்தாசலத்தில் ரூ.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் -கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தவிர்ப்பதோடு, புறவழிச்சாலையை எளிதாக கடக்கும் வகையில் விருத்தாசலம் பெரியார் நகரில் இருந்து புதுக்கூரைப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியை சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கீதா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், பணிகள் நடைபெறும் விதம் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, பணிகளை தரமாக விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டார்.
சாலை மேம்பாடு
அரசக்குழியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியை விபத்து காப்பான் பகுதியாக அறிவித்து அங்கு ரூ.7 கோடி மதிப்பில் சாலை மேம்பாடு மற்றும் பாலம், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும் சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கீதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தனசேகரன், சென்னை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சீனிவாசன், விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி, விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, விழுப்புரம் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் அண்ணாதுரை, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் சரவணன், செந்தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.