< Back
மாநில செய்திகள்
நல்லாட்டூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

நல்லாட்டூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
25 May 2023 2:48 PM IST

நல்லாட்டூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா நல்லாட்டூர் ஊராட்சி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த திட்டதிற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்புதல் கடந்த ஆண்டு இறுதியில் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு தேவையான நீரை கொசஸ்தலையாற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் எடுக்கப்பட்டு நல்லாட்டூர், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.

இநத நிலையில் கடந்த மார்ச் மாதம் நல்லாட்டூர் கிராமத்தில் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் தொடங்கப்பட்டது. இந்த கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தினால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், எனவே இத்திட்டத்தை இங்கு செயல்படுத்தக் கூடாது என்று அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கூட்டு குடிநீர் திட்டம் குறித்து நல்லாட்டூர் கிராம மக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து தற்போது கொசஸ்தலை ஆற்றில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்ட பின் ஆற்றின் அருகில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் நீர் சேமித்து, குழாய் வழியாக நல்லாட்டூர், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேற்கண்ட 3 ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்