3-வது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் கோயம்பேட்டில் தொடங்கியது
|கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் உயர்மட்ட பாதையில் 3-வது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
kசென்னை,
சென்னையில் 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்துக்கு ரூ.61,843 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சோழிங்க நல்லூர்-மாதவரம் தடத்தில் 47 கி.மீ. தூரத்துக்கு மொத்தம் 46 ரெயில் நிலையங்கள் அமைகின்றன.
இந்த தடத்தில் பெரும்பாலும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் பாதை செல்வதால் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. இந்த மெட்ரோ ரெயில் பாதைக்காக அமைக்கப்பட்ட 100-க்கணக்கான தூண்களில் உயர்மட்ட பாதைக்கான மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. மேலும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
கோயம்பேட்டில் ஏற்கனவே சி.எம்.பி.டி., கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. தற்போது கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் உயர்மட்ட பாதையில் 3-வது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக அந்த சாலையில் 500 மீட்டர் தூரத்துக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- மாதவரம்-சோழிங்க நல்லூர் தடத்தில் 42 ரெயில் நிலை யங்கள் உயர்மட்ட பாதையில் அமைகின்றன. உயர்மட்ட பாதை என்பதால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இல்லை. இந்த தடத்தில் சுரங்கப் பாதை குறைவு என்பதால் பணிகள் வேகமாக நடக்கிறது.
பஸ் நிலையங்கள் அல்லது ரெயில் நிலையங்கள், முதல் கட்ட திட்டத்தில் இருக்கும் மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களை அமைத்து வருகிறோம். பயணிகள் எளிதாக வந்து செல்வதாற்கான கட்டமைப்பு வசதிகளையும் அமைக்க இருக்கிறோம். கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைகிறது.
இதற்காக அங்குள்ள சாலையில் தடுப்பு அமைத்து பணிகளை தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.