< Back
மாநில செய்திகள்
மருதூர், நெரூர் பகுதிகளில் ரூ.1,450 கோடியில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
கரூர்
மாநில செய்திகள்

மருதூர், நெரூர் பகுதிகளில் ரூ.1,450 கோடியில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

தினத்தந்தி
|
5 March 2023 12:32 AM IST

மருதூர், நெரூர் பகுதிகளில் ரூ.1,450 கோடியில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி விரைவில் தொடங்குகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கரூர் ராயனூரில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பஸ் கூண்டு கட்டுவதற்கு பெயர் பெற்ற ஊர் கரூர். அதேபோல் கொசுவலை தயாரிக்கும் தொழில் இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளதுதான் இந்த கரூர். ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய் கொசுவலை தயாரிப்பில் முதலீடு செய்யப்படுகிறது. அதேபோல் போர்வை தயாரிக்க கூடிய மிக முக்கியமான மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கிறது. ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகள் இங்கிருந்து இந்தியா முழுவதும் ஏற்றுமதியாகிறது. அரவக்குறிச்சி பகுதி என்பது விவசாயிகள் அதிகமாக வசிக்கும் பகுதி. இந்த தொழில்களில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது இந்த கரூர் மாவட்டம். அதற்கு மிகமுக்கிய காரணம் உங்களுடைய உழைப்பு.

தனி சிறப்பு திட்டங்கள்

கரூருக்கு என்று தனி சிறப்பு திட்டங்கள் நகை கடன், பயிர் கடன், மகளிர் சுயஉதவி கடன் தள்ளுபடிக்கு பிறகு கரூர் மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு கூட்டுறவு துறையின் சார்பில் 1 லட்சத்து ஆயிரத்து 90 பயனாளிகளுக்கு ரூ.830 கோடியில் பயிர்கடன், நகை கடன், கால்நடை பராமரிப்பு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு 19 ஆயிரத்து 724 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்கள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கரூருக்கு ஒரு வேளாண்மை கல்லூரி, கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் அரசு கலை கல்லூரி, பள்ளப்பட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புகழூர், டி.என்.பி.எல்., இரு பேரூராட்சிகளை இணைத்து புகழூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.40 கோடி மதிப்பிலான புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

முதல்-அமைச்சர் கோப்பை

காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மருதூர், நெரூர் ஆகிய பகுதிகளில் 2 தடுப்பணைகள் கட்ட ரூ.1450 கோடிஅறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான வேலைகள் தொடங்க இருக்கின்றன. அதேபோல் 107 ஏக்கர் உள்ள தாதம்பாலம் ஏரியை சீரமைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. அதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளியணை, பஞ்சப்பட்டி ஆகிய முக்கியமான ஏரிகளை தூர்வார ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்து 332 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மரக்கன்றுகள் நடவு பணி

பின்னர் கரூர் மாவட்டம் முழுவதும் வனப்பகுதியினை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து காணொலி வாயிலாக பிற இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குனர் பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, எம்.எல்.ஏக்கள். மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், புகழூர் நகர் மன்ற தலைவர் சேகர் என்ற குணசேகரன், க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுங்கூர் கார்த்தி, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், கரூர் மத்திய மாநகர செயலாளர் கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் கணேசன், தெற்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மத்திய மேற்கு மாநகர செயலாளர் அன்பரசன், கரூர் மத்திய கிழக்கு மாநகர செயலாளர் ஆர்.எஸ்.ராஜா, கரூர் மாநகராட்சி பணிக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், சாலை ரமேஷ், தியாகராஜன், நந்தினி வெங்கடேஷ், சுகந்தி மணிகண்டன், யசோதா தனபாபு, கடவூர் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, கரூர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சரவணமூர்த்தி, எஸ். கே.பி. கன்ஸ்ட்ரக்சன் செந்தில்குமார், அரவக்குறிச்சி பேரூர் கழகம் பி.எஸ். மணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அலமேலு மனோகர், தேன்மொழி தியாகராஜன், நந்தினி தேவி தமிழ்ச்செல்வன், கண்ணையன், நல்ல முத்து வடிவேல், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்