திருவள்ளூர்
கட்டுமான பணியின்போது விபத்து: பள்ளி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
|பள்ளியில் புதிய கட்டிட கட்டுமான பணியின்போது மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
புதிய கட்டிட பணி
திருத்தணியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே சீனிவாசபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளை சென்னை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாக ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் மூலம் மேற்கொண்டு வந்தனர்.
இந்த கட்டிட பணியில் சென்னை மணலி பெரியதோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 39) என்பவர் பள்ளி வளாகத்திலேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ், புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி தகடுகளை வெல்டிங் மூலம் பொருத்தம் பணியில் ஈடுபட்டிருந்தார்.
தொழிலாளி சாவு
அப்போது திடீரென கால்தவறி கிழே விழுந்ததில் சுரேஷ் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பலியான சுரேசுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சுரேஷின் மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.