< Back
மாநில செய்திகள்
ரெயிலை கவிழ்க்க சதி
சேலம்
மாநில செய்திகள்

ரெயிலை கவிழ்க்க சதி

தினத்தந்தி
|
7 Sept 2022 2:17 AM IST

ஓமலூர் அருகே ரெயில்வே ஊழியர் திட்டியதால் அவரை பழிவாங்க நினைத்து ரெயிலை கவிழ்க்க திட்டமிட்டு, தண்டவாளத்தில் கல் மற்றும் இரும்பு கம்பி வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்:-

ஓமலூர் அருகே ரெயில்வே ஊழியர் திட்டியதால் அவரை பழிவாங்க நினைத்து ரெயிலை கவிழ்க்க திட்டமிட்டு, தண்டவாளத்தில் கல் மற்றும் இரும்பு கம்பி வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரெயிலை கவிழ்க்க சதி

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தின்னப்பட்டி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் வழியாக சென்னை-சேலம் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி மற்றும் கற்கள் வைக்கப்பட்டுள்ளதாக ெரயில்வே ஊழியர் அருள், ெரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

ரெயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட இரும்பு கம்பி மற்றும் கற்களை அவர்கள் அகற்றினர். மேலும் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கல் மற்றும் கம்பியை வைத்து சென்னை-சேலம் இடையே இயக்கப்படும் ெரயிலை கவிழ்க்க யாரேனும் சதி திட்டம் தீட்டி இருப்பார்களோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

அப்போது ரெயில்வே ஊழியர் அருள், காமலாபுரம் பூ மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தை வேலு மகன் ரவிசங்கர் (21) என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் தின்னப்பட்டி ரெயில் நிலைய பகுதியில் சுற்றியதாகவும், அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அருள், பொது இடத்தில் வைத்து ரவிசங்கரை திட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவிசங்கர், ரெயில்வே ஊழியர் அருளை பழிவாங்கும் நோக்கத்திற்காக தண்டவாளத்தில் இரும்பு கம்பி மற்றும் கல் வைத்ததாக போலீசார் விசாரணையில் கூறி உள்ளார்.

இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் ெரயில்வே போலீசார் ரவிசங்கரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்