திருச்சி
நடைபாதை திட்டத்துக்கு அண்ணா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதியை தேர்வு செய்ய பரிசீலனை
|நடைபாதை திட்டத்துக்கு அண்ணா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதியை தேர்வு செய்ய பரிசீலனை செய்யப்பட்டது
சுகாதார நடைபாதை
கொரோனா தாக்கத்துக்கு பிறகு மாரடைப்பு காரணமாக அதிகமானோர் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மாரடைப்பில் இருந்து நம்மை பேணிகாக்க எளிமையான நடைபயிற்சி அவசியமாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு, அங்கு சுகாதார நடைபாதை திட்டம் (ஹெல்த் வாக்) செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
சுகாதார நடைபாதை முழுவதும் பேவர்பிளாக் எனப்படும் சிமெண்டு கற்கள் பதிக்கப்பட்டு, நடப்பதற்கு தனி பாதையாக காட்டப்பட வேண்டும் என்றும், பாதையின் இருபுறமும் மரங்கள் நடப்பட்டு பசுமையாக இருக்க வேண்டும் என்றும், இந்த பாதையில் வாகன போக்குவரத்து அதிகம் இல்லாமலும், குப்பைகள் இன்றியும் சுகாதார நடைபாதை திட்டத்துக்காக அடையாளம் காணப்பட்ட பாதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் பங்களா வரை விரிவாக்கம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பாதையை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சியில் அண்ணா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள நடைபாதை பகுதியை இந்த திட்டத்துக்காக பயன்படுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அண்ணா ஸ்டேடியத்துக்கு வெளிப்புறம் குறிப்பிட்ட தூரம் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது இந்த திட்டத்துக்காக அண்ணா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பாதையை முழுவதுமாக பயன்படுத்தவும், மேலும், இந்த பாதையை காஜாமலை மெயின்ரோட்டில் கலெக்டர் பங்களா வரை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு எடுக்க இருக்கைகள்
இந்த நடைபாதையில் ஒவ்வொரு கிலோ மீட்டரை குறிக்கும் வகையில் குறியீடுகளும், குடிநீர் வசதி மற்றும் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட உள்ளது.
திருச்சியில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு ஏற்றவகையில் போக்குவரத்து இடையூறு இல்லாத பகுதி அண்ணா ஸ்டேடியத்தையொட்டிள்ள ரேஸ்கோர்ஸ் சாலை என்பதால், முதல்கட்டமாக இந்த பகுதியை தேர்வு செய்து இருப்பதாகவும், உரிய அனுமதி கிடைத்தவுடன் விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.