தர்மபுரி
காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம் பரிசீலனை
|ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காலங்களில் காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்று தர்மபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
புத்தாக்க பயிற்சி
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு உணவு பதுப்படுத்தும் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த மண்டல அளவிலான புத்தாக்க பயிற்சி முகாம் தர்மபுரி அடுத்த கடகத்தூர் கூட்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வரவேற்று பேசினார். அரசு செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குனர் நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கண்காட்சி அரங்கு
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயனடையும் வகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
மேலும் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 12 கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மேலாண்மை நிதி உதவியாக ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 788-க்கான காசோலைகளை வழங்கினார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கடகத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஐவண்ணன், வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன், விற்பனைக்குழு செயலாளர் ரவி மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த வேளாண் அதிகாரிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன பங்குதாரர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள், வேளாண் ஏற்றுமதி தொழில்புரிவோர், ஏற்றுமதி தொழில் தொடங்க ஆர்வமுடையோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் வேளாண்மை துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடு குறித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளிடம் இங்கு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
வேளாண்மை துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களின் பயன் விவசாயிகளுக்கு நேரடியாக சென்று சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேரடி கண்காணிப்பு
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வேளாண் வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு குறித்து நேரடி கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளையும், வேளாண் துறை அதிகாரிகளையும் நேரடியாக சந்திக்க வைத்து வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பயன் கிடைத்துள்ளது. காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
காவிரி உபரிநீர் திட்டம்
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தி அவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் வேளாண் வணிக துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளை முதலாளிகளாகவும், ஏற்றுமதியாளர்களாகவும் மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
விவசாய மேம்பாட்டிற்காக முதல் கட்டமாக 4 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. விவசாய விளைபொருட்களை படிப்படியாக மதிப்பு கூட்டி விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளப்பெருக்கு காலங்களில் காவிரி ஆற்றின் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது.
வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உபரி நீரை குழாய்கள் மூலம் நீரேற்றம் செய்து தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இந்த திட்டம் பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு பணிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்கூறினார்.