< Back
மாநில செய்திகள்
மாவுரெட்டி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நாமக்கல்
மாநில செய்திகள்

மாவுரெட்டி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
2 Feb 2023 12:17 AM IST

பரமத்தி அருகே மாவுரெட்டி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே மாவுரெட்டியில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கரிய காளியம்மன் மற்றும் கருப்பண்ணசாமி கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 30-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் கணபதி ஹோமும், காலை 11 மணிக்கு மேல் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். மாலை 7 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, பூமி பூஜை, யாக சாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு 2-ம் கால யாக வேள்வியும், தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் அஷ்ட லட்சுமி பூஜைகள், மூன்றாம் கால யாக வேள்வி, கோபுரங்கள் கண் திறப்பு, கலசம் வைத்தல், எந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நாடி சந்தானம், சபர்சாகுதி, உயிர் சக்தி ஊட்டுதல், நான்காம் கால யாக வேள்வி, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், 6 மணிக்குமேல் 7.30 மணிக்குள் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகமும், 9 மணிக்குமேல் 9.30 மணிக்குள் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகமும், 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் கருப்பண்ணசாமி ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மாவுரெட்டி கும்பாபிஷேக விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்