
தேனி
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தேனி, ஆண்டிப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தேனி, ஆண்டிப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மத்திய அரசு ராணுவத்துக்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை கைவிடக் கோரியும் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆண்டிப்பட்டி நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஆண்டிப்பட்டி நகர தலைவர் சுப்புராஜ், வட்டார தலைவர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமை தாங்கினர். கடமலை-மயிலை பகுதி வட்டார தலைவர் தங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முருகேசன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.