கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி
|கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுப்பக்கூடாது என்ற எண்ணத்தில் நாடாளுமன்றம் நடக்கிறது. அதை மனதில் வைத்துதான் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் நிகழ்வு நடந்துள்ளது. அவரை பதவி நீக்க வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடர்ந்து தண்டனை கொடுத்துள்ளனர். இந்தியாவில் இதுபோல் யாருக்கும் இப்படி தண்டனை கொடுத்தது இல்லை.
தஞ்சை பகுதியில் நிலக்கரி எடுக்க அனுமதி கொடுத்ததில் தமிழக அரசின் அனுமதி இன்றி அறிவித்தது தவறு. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 இடங்களை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.